வாக்குச் சீட்டை கிழித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து வாக்குச் சீட்டைக் கிழித்த இருவரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
இதன்படி வாதுவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் அக்மிமன ஹியர் பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அக்மிமன ஹியாரே மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வந்தவர் கைபேசியை எடுத்து வந்துள்ளார். அப்போது வாக்குச்சாவடிக்குள் கைபேசி ஒலித்தது. அப்போது, கைபேசியை வைத்துவிட்டு வருமாறு வாக்குச்சாவடி நிலைய அலுவலர் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நபர் வாக்குச் சாவடியில் இருந்த வாக்குச் சீட்டை கிழித்து எறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை (15) காலி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் அக்மிமன காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றுமொருவர் வாக்களிப்பதற்காக பொத்துப்பிட்டிய பூஜாராமய விகாரஸ்தானத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு முற்பகல் 11 மணியளவில் வந்துள்ளார்.
குறித்த நபர் வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு வாக்களிப்பு நிலையத்திற்குள் நுழைந்து விருப்பு எண்களை மறந்துவிட்டதாகக் கூறி வாக்களிப்பு நிலையத்தை விட்டு வெளியேற அங்கிருந்த அதிகாரிகளிடம் அனுமதி கோரினார்.
ஆனால், அதிகாரிகள் அனுமதி வழங்க முடியாது என்று கூறியதால் அவர் வாக்குச் சீட்டை கிழித்து எறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.