தேர்தலுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய குறிப்பிட்ட பேருந்துகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் தொடர்பான பொலிஸாரின் பணிகளுக்காக 175 பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.

அதேவேளை, வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக நாளை (20) நாளை மறுதினம் (21) விசேட தொலை தூர பேருந்து சேவையொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தொடருந்து சேவை

அத்துடன், கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று விசேட தொடருந்து சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளை மறுதினம் 21ஆம் திகதியும் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும், நாளை மற்றும் 22ஆம் திகதிகளில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு வரையிலும் இந்த தொடருந்து சேவையினை நடைமுறைபடுத்தவுள்ளதாகவும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அநுராதபுரத்திற்கும் மஹவவிற்கும் இடையிலான வீதியின் பழுதடைந்த நிலை காரணமாக தொடருந்து இயக்கப்பட மாட்டாது என தொடருந்து சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் செயலாளர் சந்தன லால் கூறுகையில், சம்பந்தப்பட்ட பாதையில் பழுது நீக்கும் பணிகள் நிறைவடைந்த போதிலும், சமிஞ்சை கோளாறுகள் உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

electionSri LankaSri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment