யாழ்ப்பாணத்தின் புதிய கட்ட வளர்ச்சி குறித்து ரணில் வழங்கியுள்ள உறுதி

யாழ்ப்பாணம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் அதிகாரப்பகிர்வு மாத்திரம் போதுமானது அல்ல எனவும், பிரதேசத்தின் அபிவிருத்தியும் அதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற யாழ். தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தச் சந்திப்பில் தொழில் வல்லுநர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,ஏனைய அனைத்து மாகாணங்களிலும் அபிவிருத்தி ஏற்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்திகள் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நான் யாழ்ப்பாணத்தின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றேன். ஆனால், யாழ்ப்பாணத்தின் பிரச்சினைகளை அதிகாரப் பகிர்வில் மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது.

இப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஏனைய அனைத்து மாகாணங்களிலும் அபிவிருத்தி காணப்பட்ட போதிலும் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி இல்லை.

யாழ்ப்பாணத்தின் புதிய கட்ட வளர்ச்சி


போருக்கு முன்னர், யாழ்ப்பாணம் கொழும்பு, கண்டி மற்றும் காலியுடன் இணைந்து நாட்டின் மூன்றாவது அல்லது நான்காவது பெரிய நகரமாக மாறியிருந்தது. இன்று யாழ்ப்பாணத்தை விட காலி மற்றும் மட்டக்களப்பு நகரங்கள் அபிவிருத்தி அடைந்துள்ளன.

எனவே, நாம் இப்போது யாழ்ப்பாணத்தையும் நாட்டையும் ஒரு புதிய கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக, எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி காஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

jaffnaRanil WickremesingheSri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment