தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ள சஜித்: ரணில் அறிவிப்பு

அனைத்தையும் இலவசமாக தருவதாக கூறும் சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் எனக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் இருக்கின்றது எனவும், தன்னைத் தோற்கடிக்க நானும் அநுரகுமாரவும் தயாராகி வருகின்றோம் என்றும் சஜித் புலம்புகின்றார்.

ஏற்கனவே தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளமையால் தான் இப்படி ஒப்பாரி வைக்கின்றார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவவில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் மேலும் உரையாற்றுகையில்,

நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகள்

இன்று அநுரகுமார நாடு முழுவதும் வெறுப்பை விதைத்து வருகின்றார். வெறுப்பு என்ற போர்வையின் ஊடாக அவர் அதிகாரத்தைப் பெற்றால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் அநுரகுமார, தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும்.”பிரபலமாக இல்லாவிட்டாலும், மக்களின் எதிர்காலத்துக்காக எப்போதும் உண்மையை மட்டும் நான் கூறுகின்றேன்.

அன்று அநுரகுமாரவிடம் ஒப்படைக்கப்பட்ட விவசாய அமைச்சரின் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால் இந்த நாட்டின் விவசாயம் இன்று அபிவிருத்தியடைந்திருக்க. கொள்கையற்று வெறுப்பையே விதைக்கும் அவரது வேலைத்திட்டம் நாட்டின் அழிவுக்கு வழிவகுக்கும்.

எனவே, சஜித் பிரேமதாஸவுக்கும் நாமல் ராஜபக்ஷவுக்கும் வழங்கப்படும் வாக்கு அநுரகுமாரவுக்கு அளிக்கம் வாக்கு என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது. எம்மைத் திருடர்கள் என்று சொல்பவர்கள். எதற்காக மக்களிடம் பொய் சொல்கிறார்கள்? நாம் திருடர்களைப் பிடிப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றோம்.

மோசடியால் திரட்டிய சொத்துக்கள்

மோசடியால் திரட்டிய சொத்துக்களைக் கையகப்படுத்தக்கூடிய சட்டமூலத்தையும் தயாரித்திருக்கின்றோம். அவர்கள் மக்களிடம் பொய் சொல்கின்றார்கள். அவர்கள் கூறும் பொருளாதார முறை தவறானது.

மக்கள் மத்தியில் குரோதத்தைத் தூண்டிவிட்டே அவர்கள் வாக்குகளைக் கோருகின்றார்கள். மக்கள் தம்முடைய, தமது பிள்ளைகளுடைய எதிர்காலம் பற்றிச் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது அவசியமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் எனக்கும், மொட்டுக் கட்சியினர் என்னோடு இருக்கின்ற அணியினருக்கும் வாக்களிப்பதே பொருத்தமாக அமையும். எனவே, தேர்தலில் எரிவாயு சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது ரூபாவும் கிடைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Anura Kumara DissanayakaColomboelectionpresidential electionSajith PremadasaSri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment