தேர்தல் முடிவுகளை அடுத்து ஏற்படவுள்ள மாற்றங்கள்! 500 ரூபாவாக உயரப் போகும் டொலர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் அல்லது அநுரகுமார வெற்றிபெற்றால் நாம் மிகப்பெரிய நெருக்கடி நிலையை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போது ஒரு டொலரின் பெறுமதி சுமார் 500 ரூபாய் வரையில் செல்லும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அங்கு  எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மீ்ண்டும் பொருளாதார நெருக்கடி

இதன்போது, “ஐக்கிய மக்கள் சக்தி அல்லது தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றால், அடுத்த சில மாதங்களில் நாம் என்ன எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? மீண்டும் எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள் இருக்குமா? IMF மீண்டும் எங்களுக்கு உதவுமா? ”  என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு தொடர்ந்தும் பதிலளித்த ஜனாதிபதி,

அவர்கள் வெல்லப்போவதில்லை. ஆனால் நாம் இணக்கப்பாடுகளின் அடிப்படையிலான நிலையான ஒப்பந்தத்திற்கு அமையவே செயற்பட வேண்டியுள்ளது.

அவ்வாறு முடியாதென நினைத்தால் நாம் கடுமையான நெருக்கடியில் சிக்குவோம். ஒரு டொலருக்கு சுமார் 500 ரூபாய் வரையில் செலுத்த நேரிடும்.

மேலும் இவர்களின் முரண்பாடான கொள்கைகளால் சர்வதேச நாணய நிதியம் திட்டத்தில் இருந்து விலகினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். அதுவே அவர்களால் செய்ய முடிந்த சாதனையாகும்.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஏதாவது பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தால், சஜித் பிரேமதாசவும் சில இலவச திட்டங்களை அறிவிக்கிறார். அவ்வாறு இருவேறு திட்டங்களின் கீழ் வரவு செலவை முகாமைத்துவம் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.


Comments (0)
Add Comment