தேசிய மக்கள் சக்தியினர் (NPP) நாட்டில் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்துவதற்குத் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
கட்டுக்குருந்தவில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பிரசார கூட்டம் நேற்று (12) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “கடந்த சில தினங்களில் ஜே.வி.பியுடன் தொடர்புடைய மாணவ குழுவினர் பல்கலைக்கழகமொன்றில் முன்னிலை சோஷலிச கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பாரிய வன்முறை
கடந்த 10 ஆம் திகதி இரவு முதல் மாணவர்களின் விடுதிகளுக்குள் நுழைந்தும் அவர்கள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இதன் காரணமாக தற்போது குறித்த பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல் நிலைமை ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் நீண்டு செல்லும். ஜே.வி.பியுடன் தொடர்புடைய மாணவ சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர், தங்களது கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
தயாசிறி குற்றச்சாட்டு
இந்த நிலை தொடருமாயின் இதுவே இறுதித் தேர்தலாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஏனென்றால், தேசிய மக்கள் மக்கள் சக்தியின் கைகளுக்கு அதிகாரம் செல்லுமாயின் நாட்டில் மற்றுமொரு தேர்தல் நடத்துவதற்கு ஒருபோதும் வாய்ப்பு ஏற்படாது.
அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாகக் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலொன்றை நடத்துவதற்கு 52 நாட்கள் தேவைப்படும். 3 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, தேசிய மக்கள் சக்தியினால் எவ்வாறு அமைச்சரவையொன்றை, அமைக்க முடியும். அவர்கள் தற்போது மக்களை அச்சுறுத்தி வாக்கு கேட்டும், ஒரு போக்கினை கையில் எடுத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.