தொடரும் இழுபறி…! இன்று கூடும் தமிழரசுக் கட்சியின் சிறப்புக் குழு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐவர் கொண்ட சிறப்புக் குழு பொதுச்செயலாளர் பா. சத்தியலிங்கத்தின் வவுனியா (Vavuniya) பணிமனையில் இன்று காலை 8.30 மணியளவில் கூடுகின்றது.

கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah), பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., சிவஞானம் சிறீதரன் எம்.பி. ஆகிய ஐவரே இக்குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

சிறப்புக் குழு

கிழக்கிலிருந்து எவரும் இக்குழுவில் இல்லை என்று கூறப்பட்டமையால் மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் தி.சரவணபவன் ஆறாவது உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டு இருக்கின்றார் என்று கூறப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளை ஆராய்ந்து அறிக்கையிடும் நோக்கில் இந்தச் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, இன்று கூடி ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே, கடந்த முதலாம் திகதி கூடிய தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை அறிவித்தது.

அரியநேத்திரனுக்கு பகிரங்கமாக ஆதரவு 

இந்தத் தீர்மானத்தை முதலில் மறுத்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மறுநாளே அந்தத் தீரமானத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் சிறீதரன் எம்.பி. உள்ளிட்ட பலர் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் குழப்பங்களுக்கு முடிவு காணும் பொருட்டே இன்று கூடும் சிறப்புக் குழு விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும்.

இந்தப் பரிந்துரைகளின்படி, எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் கட்சியின் மத்திய குழு இறுதி முடிவை எட்டும் என்று கூறப்படுகின்றது.



Ilankai Tamil Arasu KachchiMavai SenathirajahtnaVavuniya
Comments (0)
Add Comment