எதிர்வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அரியநேத்திரன் அதிரடி

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தெரிவித்துள்ளார்.

அதாவது, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெறுகின்ற செல்வாக்கைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினரால் வட, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார்.

இத்தேர்தலில் அவர் வெல்லப்போவதில்லை என்றாலும், இதன்மூலம் கிடைக்கப்பெறும் செல்வாக்கைப் பயன்படுத்தி எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெல்லக்கூடும் என்ற கருத்துக்கள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித்தேர்தல் 

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் வட, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் செல்வாக்கை ஒருபோதும் தனக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அல்லாத ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் உத்தேசத்தைக் கொண்டிருக்கிறார்களாக என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவ்வாறானதொரு கருத்தை அவர்கள் இதுவரையில் எங்கும் கூறவில்லை எனவும், அவர்கள் அத்தகைய உத்தேசத்தில் இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் களமிறங்குவார்கள் என்று தான் கருதவில்லை.

மாறாக பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அவர்களது அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வார்கள் எனவும் அரியநேத்திரன் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

electionP AriyanethranslpresidentialelectionsriLankaelectionupdatesTamils
Comments (0)
Add Comment