இலங்கையின் அரசியல் எங்கே பயணிக்கின்றது...

இலங்கையின் அரசியல் எங்கே பயணிக்கின்றது...

இலங்கையின் அரசியல் எங்கே பயணிக்கின்றது...

இன்றைய சூழலில் இலங்கையின் அரசியல் சரியான பாதையில் பயணிப்பதாக எவருமே கருதவில்லை என்கின்ற புள்ளியில் இருந்து இந்த அரசியல் பார்வையை ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. பூமிப பந்தில் இந்து சமுத்திரத்தின் எங்கோ ஓரிடத்தில் ஒரு துளி போன்று திரண்டிருக்கின்ற சின்னஞ்சிறிய தீவொன்றில் சிறைப்பட்டிருக்கும் 22 மில்லியனுக்கு சற்றுக்  கூடுதலான மக்களின் வாழ்வுடன் தொடர்புடையது அது. அழகிய அற்புதத் தீவாக அது இல்லாமல் அதன் இருப்பிடம் உலகின் எங்கோ ஒரு மூலையில். பனியில் உறைந்த, பூகோள அரசியலுக்கு அவசியமற்ற அமைவிடம் ஒன்றில் அமைந்திருப்பின் சில வேளைகளில் நிம்மதியாக இருந்திருக்குமோ என்னவோ?! 

எல்லாவித வளங்களும் அமைந்த இந்தத் தீவில் புத்தி சாலித்தனம் மிக்க மனிதர்கள் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய சாபக்கேடு. அதை விட நாட்டுப்பற்று இல்லாமல் இருப்பது மிகப்பெரிய அவலம். இனப்பற்றும் மதப்பற்றும் இருக்கும் அளவுக்கு நாட்டைப் பற்றிய சிந்தனை இல்லாதிருப்பது அவலத்திலும் அவலம். 

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் காடாகவும் கவனிப்பார் அற்றும் கிடந்த நிலையில் இலங்கைத் தீவும் பேயை வணங்கும் இயக்கராலும் பாம்பை வணங்கும் நாகராலும் நிறைந்து கிடந்திருக்கின்றது. மதங்கள் உருவாகி மனித குலம் கடவுள்களின் பெயரால் நம்பிக்கைகளின் பக்கம் நெறிப்படுத்தல் என்கின்ற கருப்பொருளில் உள்ளீர்க்கப்பட்டுக் கொண்டிருந்தனர். 

 இலங்கைத் தீவை இந்தியாவில் இருந்து வந்த பௌத்தம் சூழ்ந்து கொண்டது. அன்றில் இருந்து இன்று வரை பௌத்தத்திற்கு எந்தவித எதிர்ப்பும் இருந்ததில்லை. ஆனால் அண்மைக் காலமாக பௌத்தம் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றது என்கின்ற போர்வையில் அராஜகங்கள் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் பின்னணிகளை ஆராயும் பொழுது அரசியல் ஆதாயம் வேண்டியும், நாட்டின் செல்வங்களை சூறையாடுகின்ற நோக்குடனும் செயற்படுகின்ற குழுக்களே இந்த அநியாயங்களைத் திரை மறைவில் திட்டமிட்டு செயற்படுத்துகின்றன என்பது தெளிவாகி வருகின்றது.

பிராந்திய வல்லரசுகள் ஒரு புறம் தங்கள் கைவரிசையைக் காட்டி தங்களை நோக்கி இழுப்பதற்காக நடாத்தும் கண்கட்டு வித்தைகளால் நாட்டை சீரழிப்பது போதாதென்று, உள்நாட்டு அரசியல் அந்தகர்களும் எரிகின்ற நெருப்பில் பிடுங்கியது லாபம் என்கின்ற தோரணையில் தங்கள் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியாவால் இந்த நாட்டின் மீது திணிக்கப்பட்ட 30 வருடகால யுத்தம் என்ன நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம்  இன்னும் நிறைவேறாத நிலையில். நிலைமை இருந்த இடத்தை விட மோசமான இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதை இந்திய நாடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்  போவதில்லை. 

நாட்டில் ஆளும் வர்க்கம் என்று தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்ற குழுவிடம் எப்படியான புரிதல் இருக்கின்றது  என்பது மர்மமாகவே உள்ளது.. 

இலங்கையில் மீண்டும் இந்தியா விளையாடுகின்றதா அல்லது ஆளும் தரப்பு விளையாடுகின்றதா என்பதும் புரியாத புதிராகவே இருக்கின்றது. இரண்டையும் சந்தேகிப்பதற்குப் போதிய முகாந்திரங்கள் இருக்கின்றன. 

இந்தியாவின் முந்தைய விளையாட்டிற்கு தமிழ் மக்களின் அதிருப்தி துரும்பாகப் பயன்பட்டது. அதன் தற்போதைய விளையாட்டிற்கு வஹாபிஸத்தின் விஷஜந்துக்கள் பயன்பட்டிருக்குமோ என்கின்ற சந்தேகம் பெரும்பாலான மக்களிடம் இருக்கின்றது. அப்படி இல்லையானால் இந்த இயக்க வாதிகளின் எதிரிகளாக அப்பாவி கிறிஸ்தவ தமிழ் மக்கள் தெரிவு செய்யப்பட வாய்ப்பில்லை. ஏனென்றால் இயக்க வாதிகளின் கொள்கைப் பிணக்கு இருக்கின்ற ஒரே கூட்டம் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுகின்ற ஸூபிகளின் கூட்டம் மட்டுமே. 

இயக்க வாதிகளை எதிர்க்கின்ற ஏனையவர்களின் கூட்டத்தில் ஞான சார தேரரும் அத்துரலிய ரத்ன தேரரும் அவர்கள் சார்ந்த பௌத்த அடிப்படை வாத இயக்கங்களும் மட்டுமே இருக்கின்றன. அவை யாவும் ஆளும் வர்க்கத்தின் அனுசரணையில் இயங்குபவை. திடீர் திடீரெனத் தலைகாட்டி நாட்டில் பயப்பிராந்தியை உருவாக்கி விட்டு மீண்டும் தங்கள் தலைகளை பொந்துக்குள் இழுத்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை. 

திடீர் என்று ஒரு டொன் பிரசாத்தோ அல்லது நாலகவோ அல்லது வேறு எவரோ வெளிப்படுவார்கள். சொல்லிக் கொடுத்தபடி ஊடகங்கள் முன்னால் ஒப்புவிப்பார்கள். மறைந்து விடுவார்கள். ஒரு சில ஊடகங்கள் அவற்றை முன்னுரிமை கொடுத்து பல தடவைகள் ஒளிபரப்புச் செய்யும். அவை பிரேக்கிங் செய்தியாகவும் வெளிவந்து பயமுறுத்தும். வெளியே வந்த சில சர்ப்பங்களில் கலவரம் ஒன்று நடந்து முடியும் வரை காத்திருந்து மறைந்து விடும்.

மைத்திரிபாலவையும் கோத்தாவையும் கொல்வதற்கு முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ரணில் இன்னும் கம்பீரமாக பாராளுமன்றம் சென்று வருகின்றார். குற்றம் சாட்டியவர்களைக் காணவில்லை.

இதற்கிடையில் திடீரென சில நாட்களாக ஞான சாரர் வெளியில் இறங்கி அபாயச் சங்கு ஊதியிருக்கின்றார். நாட்டில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று குற்றம் சாட்டிய ஒருவர் தைரியாக வெளியில் வந்து அரசாங்கத்தையே சவாலுக்குட்படுத்துவதும் சங்கடத்தில் ஆழ்த்துவதும் அபாய அறிவிப்புச் செய்வதும், நான் நினைக்கவில்லை உலகில் எந்த நாட்டிலாவது சாத்தியப்படும் என்று. 

அவர் அருளிய பொன்மொழிகளில் மிகவும் கருத்துடையதும் ஆழ்ந்த சிந்தனைக்குரியதும் மனித குலம் யாவற்றுக்கும் பயன்படக் கூடியதுமான கருத்துடன் எனக்கு உடன்பாடுண்டு. 

அதாவது தௌஹீத் ஜமாஅத் தயாரித்த சிங்கள மொழிபெயர்ப்புக் குர்ஆனின் ஒரு வசனமாகிய ‘ அவர்களும் திட்டமிடுகின்றார்கள், அவனும் திட்டமிடுகின்றான். திட்டமிடுபவர்களில் மிகச் சிறந்தவன் அந்த அல்லாஹ்வே யாகும்’ என்கின்ற வசனத்தை மாற்றி ‘சதிகாரர்களில் மிகச் சிறந்த சதிகாரன் அவனே’ என்று பொருள் கொண்டு, ‘உயிர்த்த ஞாயிறு சம்பவத்தின் பின்னால் இருந்தவன் அல்லாஹ்வே’ என்று அவர் கூறியிருந்தார். 

எமது ஆலிம்களும் அரசியல் வாதிகளும் அவரிடம் சொல்லுங்கள், ஆமாம், திட்டமிடுபவர்களில் மிகச் சிறந்தவன் அவனே என்று விளங்க வையுங்கள். 

யாரோ திட்டமிட்டார்கள். யாரோ செயல் படுத்தினார்கள். உயிர்த்த ஞாயிறு சம்பவம் நடந்து முடிந்தது. அதனால் வாக்குகளை அள்ளிச் சுருட்டினார்கள். ஆட்சியைப் பிடித்தார்கள். ஆனால் திட்டமிடுவதில் மிகச் சிறந்தவனாகிய அல்லாஹ் ‘கொரோனா’ என்றொரு வைரஸைத் திட்டமிட்டான். அனுப்பி வைத்தான். புனித கஃபாவை இடிக்க வந்த யானைப்படையினரை ஓடஓட விரட்டியடித்த ஸிஜ்ஜீல் பறவைகளை விட வீரியமாக அவர்களின் எல்லாவிதமான மூலைமுடுக்குகளிலும் புகுந்து விரட்டி விரட்டித் தாக்கியழித்துக் கொண்டிருக்கின்றது. அவனது திட்டத்தை முறியடிக்கவும் முடியாது. அவற்றை விளங்கிக் கொள்ளவும் முடியாது. அவர்கள் இதுவரை பெற்ற அத்தனை பெயர்களையும் கௌரவங்களையும் பூஜ்யத்தினால் பெருக்கி இருக்கின்றான். முடிந்தால் சிக்கெடுத்துப் பார்க்கட்டும். 

இனிமேல் நாடு செழிக்க நாளெடுக்கும். அதற்கு முன்னால் இந்த ஆட்டக்காரர்கள் எல்லோரும் அரங்கத்தைக் காலி செய்ய வேண்டி வரும் என்பது எழுதப்பட்ட விதியாகும்.

டாக்டர் நஜிமுதீன் சிஹாப்தீன்.