மாலைத்தீவில் உயிரிழந்த தேசிய கால்பந்தாட்ட வீரர் பியூஸ்லஸின் புகழுடல் இலங்கை வந்தடைந்தது..!

மாலைத்தீவில் உயிரிழந்த தேசிய கால்பந்தாட்ட வீரர் பியூஸ்லஸின் புகழுடல் இலங்கை வந்தடைந்தது..!

மாலைத்தீவில்  உயிரிழந்த  இலங்கை தேசிய  கால்பந்தாட்ட  அணி வீரர் டக்ஸன் பியூஸ்லஸின்  மரணம்  தொடர்பில் நீதியான  விசாரணை  வேண்டும் என தமிழ்  தேசியக்  கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  வலியுறுத்தியுள்ளார். இந்த  விடயம்  தொடர்பில், வௌிவிவகார அமைச்சர்  பேராசியர்  G.L.பீரிஸிற்கு அனுப்பி  வைக்கப்பட்ட  கடிதத்தில் பாராளுமன்ற  உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  இந்த விடயத்தை கூறியுள்ளார். மன்னார் – பனங்கட்டுக்கொட்டு  கிழக்கு பகுதியை சேர்ந்த  டக்ஸன், 2018  ஆம் ஆண்டு முதல் இலங்கையின்  தேசிய  கால்பந்தாட்ட அணியில்  தனது  திறமைகளை வௌிப்படுத்தி  வந்தவர்  என அந்த கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட  விளையாட்டில்  இலங்கை மண்ணுக்கு  பல கௌரவத்தை பெற்றுக்கொடுத்த  டக்ஸன், கடந்த பெப்ரவரி  மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்தார்  என்ற செய்தி , தாய்மண்ணிலுள்ள  அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியதாக  பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம்  அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டக்ஸனின்  மரணம், கொலையா  என்ற சந்தேகம்  அனைவர்  மத்தியிலும் உள்ளதாக  பாராளுமன்ற  உறுப்பினர் கூறியுள்ளார். உரிய  முறையில் விசாரணை  நடத்தி,  இவரின் மரணத்திற்கான  காரணத்தை  கண்டறிய நடவடிக்கை  எடுக்குமாறு, வௌிவிவகார அமைச்சரிடம்  பாராளுமன்ற  உறுப்பினர் செல்வம்  அடைக்கலநாதன்  கோரிக்கை விடுத்துள்ளார். மாலைத்தீவிலுள்ள குடியிருப்பிலிருந்து  டக்ஸனின்  சடலம், கடந்த  பெப்ரவரி  மாதம்  26 ஆம் திகதி மீட்கப்பட்டது. மாலைத்தீவு கழக போட்டிக்காக  சென்றிருந்த நிலையில், உபாதை  காரணமாக  கடந்த 26 ஆம் திகதி போட்டிகளில்  அவர்  பங்கேற்கவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  குடியிருப்பிலிருந்து டக்ஸன்  சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். 31 வயதான  அவர்  இலங்கை  கால்பந்தாட்ட அணியின்  தலைசிறந்த  வீரர்களில் ஒருவராவார். கடந்த  மாதம்  26 திகதி  மாலைதீவில்  மரணமடைந்த  இலங்கை  தேசிய  கால்பந்தாட்ட   வீரர் பியூஸ்லஸ் அவர்களின்  புகழுடல்  இன்று (3) அதி காலையில் கட்டுநாயக்கா  சர்வதேச  விமான நிலையத்தின்  ஊடாக  இலங்கை வந்தடைந்தது. தற்போது  அவருடைய உடல் பிரேத  பரிசோதனைக்காக  நீர்கொழும்பு வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது. உடலை  பெறுவதற்காக  அவருடைய துணைவியார்  மற்றும்  குடும்பத்தினர் நிற்கின்றார்கள்.  இன்னும் சில மணித்தியாலங்களில்  அவருடைய உடல் யாழ்ப்பாணத்துக்கு  அஞ்சலிக்காக எடுத்துச்  செல்லப்பட்டு  எதிர்வரும் சனிக்கிழமை  மன்னார்  மாவட்டத்திற்கு அஞ்சலிக்காக  எடுத்து வரப்பட உள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து  மன்னார் வரும் வழியில்  பூநகரி  முழங்காவில்  தேவன் பட்டி  போன்ற  இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட  கழக  வீரர்கள்  அவருடைய உடலுக்கு  அஞ்சலி  செலுத்தும்  விதமாக பவனியாக  வர உள்ளார்கள்  என்றும் தெரிய  வருகிறது.