மீண்டும் ஒரு வெறியாட்டம் ! நியூஸிலாந்தில் நடைபெற்ற தாக்குதல் பற்றிய ஒரு விமர்சனப் பார்வை.

மீண்டும் ஒரு வெறியாட்டம் !  நியூஸிலாந்தில் நடைபெற்ற தாக்குதல் பற்றிய ஒரு விமர்சனப் பார்வை.
மீண்டும் ஒரு வெறியாட்டம்
ஓர் அமைதியான நாடு, எல்லோரையும் அரவணைக்கின்ற நாடு, நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கின்ற ஒரு தேசம், கொள்ளை நோய் உலகம் முழுவதும் வெறியாட்டம் ஆடும்பொழுதும் அந்த நாட்டில் எந்த விதமான தாக்கத்தையும் செலுத்த முடியவில்லை. ஒவ்வொரு அடியையும் நிதானமாகவும் கவனமாகவும் எடுத்து வைத்து உலகம் முழுவதும் தனக்கென ஓர் உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு, அதுதான் நியூஸீலாந்து.
அங்கே எம்மவன் ஒருவன் தனது மனோ வக்கிரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றான். இதற்கு முன்னரும் இன்னுமொரு ‘வெள்ளையர் உயர்ந்தவர்’ என்று நம்புகின்ற வெறியன் ஆடி முடித்த அரங்குதான் அது. அவனுக்கு ஒரு பின்னணி இருந்தது. அதனை அவனது மதத்தோடு தொடர்பு படுத்த நான் விரும்பவில்லை. அது வெள்ளையர் ஆதிக்கம் என்கின்ற நீண்ட காலமாகக் கனன்று கொண்டிருக்கின்ற நெருப்புக் கங்குகளின் மீது வெறியோடு கூடிய ‘இஸ்லாமோ போபியா’ என்கின்ற புயல் காற்று சுழன்று வீசியதன் விளைவு அது.
இந்த இலங்கையனுக்கு என்ன வெறுப்பு அவர்கள் மீது இருக்க முடியும். அவனை அரவணைத்து தங்குமிடம் கொடுத்து, அவன் அகதியாக இருக்கும் வரை வாழ்க்கைக்கான உதவித் தொகை கொடுத்து, அவனை வாழ வைத்த பூமியில் வெறியாட்டம் ஆடியிருக்கின்றான். அதற்கு என்ன விதமான காரணங்கள் இருக்கலாம், அவற்றை எதிர்காலத்தில் இல்லாமல் செய்வதற்கு அவன் சார்ந்த சமூகம் என்ன செய்ய வேண்டும் என்பதனை எடுத்து நோக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது.
சம்பவம் நடந்து முடிந்த கையோடு அவனது ஊரின் மீது காறி உமிழ்கின்ற செயல்களில் எம்மவரே ஈடுபட்டிருக்கும் பொழுது, அவனை வைத்து அவன் சார்ந்த சமூகமாகிய முஸ்லிம்கள் மீது இன்னுமொரு சுற்று வலம் வருவதற்கு முடியாதவாறு அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆப்பு வைத்து விட்டார். அவரது அறிக்கையின் முதிர்ச்சி, நிச்சயமாக இலங்கை அரசியல் வாதிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். அது மட்டுமல்லாமல் அவனது தாயைத் தவிர குடும்பம் முழுவதும் வெளிநாட்டில் வாழ்வதனாலும், அவன் முன்னரே அறியப்பட்ட அவதானிக்கப்பட்ட ஒருவன் என்பதனாலும், வீடுகளுக்குள் புகுந்து சமையலறைக் கத்திகளையும் அரிவாள் மனைகளையும் உலக்கை உரல் போன்றவற்றையும் கைப்பற்றி சிரச, ஹிரு, அத தெரண போன்ற ஊடகங்களில் காட்சிப்படுத்தி, இரண்டொரு வல்லுனர்களின் அபிப்பிராயங்களை அரங்கேற்றி, அண்டி தெறிக்க அலற விட முடியாதபடி அம்மையார் இவர்களை அடக்கி வைத்து விட்டார்.
New Zealand: Police shoot dead mall attack ′terrorist′ | News | DW |  03.09.2021
இருந்தாலும் கூட நாம் அந்த வெறியனின் சமூகம் சார்ந்த மக்கள் என்கின்ற முறையில் நடந்த சம்பவம் குறித்தும், எதிர்காலத்தில் இது போன்று ஏற்படக்கூடிய சங்கடங்கள் குறித்தும் ஆராயாமல் இருப்பது சரியான வழியாகும் என்று நான் கருதவில்லை. இன்னும் எத்தனை கறுப்பாடுகள் எங்கெங்கு பதுங்கியிருக்கின்றன என்று தெரியவில்லை.
இலங்கையில் நடைபெற்ற உயிர்த்தெழுந்த தினக் குண்டு வெடிப்புக்கு வேண்டுமானால் அரசியல் காரணங்கள் இருக்கலாம். அழிவுக்கென தெரிவு செய்யப்பட்ட இலக்குகள், தாக்குதல் அரங்கேற்றப்பட்ட விதம், கச்சிதமாகத் திட்டமிடப்பட்டு, பல பேரின் துணையோடு இயங்கிய துல்லியம், உளவுத் தகவல்கள் புறக்கணிக்கப்பட்ட முறை எல்லாமே ஓர் அரசியல் பின்னணியினை, அல்லது ஒரு மிகப்பெரிய செல்வாக்கு மிக்க கரமொன்றின் பின்புலத்தை தெளிவாகச் சொல்கின்றன. இது போன்று தான் செப்டெம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலும் இருந்தது. அதன் பலன், பல நாடுகள் சூறையாடப்பட்டன, கடைசி முடிவு பூச்சியமாக இருந்தாலும், அப்பாவி மக்களின் அழிவு என்பது ஈடு செய்ய முடியாத இழப்புக்கள்தான்.
அமெரிக்க தாக்குதலிலும் சவூதியைச் சேர்ந்த 15 பேர் இருந்தார்கள், இலங்கைத் தாக்குதலிலும் அதேயளவு ஆட்கள் இருந்தார்கள், ஆனால் கைது செய்யப்பட்ட ஏனையோர் குவாண்டனாமோ பேயில் கொண்டு போய் சிதைக்கப்பட்ட சந்தேகப் பேர்வழிகள் எனப்படுகின்ற குறிவைக்கப்பட்ட noted மனிதர்கள் போன்றவர்கள் தான்.

நாம் சிந்திக்க வேண்டிய விடயம் அதுவல்ல. ஏன் இவ்வளவு இலகுவாக எமது ஈமான் கொண்ட மனிதர்கள் சிக்குகின்றார்கள். இவர்களுக்கு நன்கு தெரியும் அப்பாவி மக்களைக் கொன்று விட்டு சொர்க்கம் செல்ல முடியாது என்பது. யுத்தத்தில் கூட தர்மத்தைப் போதித்த மார்க்கம் எமது மார்க்கம். அழகான வழிகாட்டல் இருந்தும் அழிவில் செல்வதற்கு என்ன காரணம் என்பதுதான் மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது.
எனது சிந்தனையின் படி இப்படியான தாக்குதல்களில் சம்பந்தப்படுகின்ற நபர்கள் இரண்டு வகைப்படுகின்றார்கள். ஒரு வகை கூட்டாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், மற்றையது தனியான ஓநாய்கள் என்று சொல்லப்படுகின்ற ஒற்றை மனிதர்கள்.
கூட்டாக சேர்ந்து இயங்குபவர்கள் நிச்சயமாக அரசியல் செயற்பாட்டாளர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய பின்னணி இருக்கும். அதன் பின்னால் நீண்ட காலத் திட்டங்கள் இருக்கும். இலங்கையின் அரசியல், அமெரிக்காவின் அரசியல், இந்தியாவின் அரசியல் எல்லாமே அதற்கான உதாரணங்கள்.
ஆனால் இந்தத் தனியான ஓநாய்களுக்கு அவர்கள் வாழ்கின்ற நாடு, அவர்கள் சார்ந்த சமூகம் ஆகிய இரண்டுமே காரணமாக இருக்கின்றன. வெளிநாட்டு வாழ்க்கை, நல்ல சம்பாத்தியம், ஊரில் செல்வாக்கு, சொகுசான வாழ்வு என்று கனவு கண்டு விமானம் ஏறி வந்தவர்கள் எல்லோருமே அப்படியான சொகுசு வாழ்க்கையை வாழவில்லை என்பதுதான் யதார்த்தம். மத்திய கிழக்கில் குறைந்த சம்பளத்தில் அடிமை வாழ்வுக்குப் பழக்கப்பட்டாலும், அறிந்தவர் தெரிந்தவர் மத்தியில் ஏதோ நாட்டில் சம்பாதிக்க முடியாத அளவு சம்பாதிக்க முடிகின்றதே என்கின்ற ஆறுதலில் அங்கு சென்றவர்கள் யாரும் இப்படியான திசைமாறிய பயணங்களில் ஈடுபட்டதாக நாம் கேள்விப்படவில்லை. அவர்களுக்கு ஏதோ ஒரு பொறுப்பு இருக்கிறது.
New Zealand PM Ardern says supermarket stabbing was 'terrorist attack' -  BBC News
ஆனால் மேலை நாடுகளில் தஞ்சம் கோரி வந்து சேர்ந்த எல்லா இனத்தவர் மற்றும் சமூகத்தவர் மத்தியிலும் இப்படியான சில பேரை எம்மால் சந்திக்க முடிகின்றது. பிரான்ஸில் சில சம்பவங்ககள் கேள்விப்பட்டோம். டொரோண்டோ, கனடாவில் எத்தனையோ சம்பவங்கள், லண்டனில் இன்னும் சில சம்பவங்கள், ஜெர்மனியிலும் பல சம்பவங்கள் எமது காதுகளை எட்டியிருக்கின்றன,
‘இந்த வளர்ந்த நாடுகளில் வளம் இருக்கின்றன, ஆனால் வாழ்கை இல்லை’. அவர்கள் தனிமனித சுதந்திரம், தொந்தரவற்ற வாழ்க்கை என்கின்ற பெயரில் சமூக வாழ்வைத் தொலைத்து விட்டார்கள்.
வார நாட்கள் முழுவதும் உழைத்து முடித்து வார இறுதியில் மதுபான விடுதியிலும் கிளப் இலும் காலம் கழிக்கின்ற ஒரு கலாச்சாரம் அங்கு இருக்கிறது. அடுத்த வீட்டில் இருப்பவரே யார் என்று தெரியாத அந்நியமான ஒரு தனிமை. ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்தாலும் இந்த நாடு நமக்குரியது என்கின்ற எண்ணமே இல்லாத உணர்வு. யாருடனும் ஒட்டாமலும் உறவாடாமலும் மண்ணின் மீது பற்று வருவதற்கு சாத்தியமில்லை. நாடு என்பது மண்ணல்ல, மனிதர்கள். எனவே இந்த நாடுகளில் வாழ்கின்ற மனிதர்கள் தனித்து வாழப் பழகுகின்றார்கள். திருமணத்தை வெறுக்கின்றார்கள், குழந்தைகளை விரும்புகின்றார்களில்லை. பொறுப்பினைப் பாரமாக நினைக்கின்றார்கள். விளைவு பயங்கரமாக இருக்கிறது. தனிமையின் தாக்கத்தினால், விரக்தியின் விளிம்பினை நோக்கித் தள்ளப்படுகின்றார்கள். எல்லோருமே மனஉளைச்சல், மனஅழுத்தம், பயம், தாழ்வுச் சிக்கல், என்று எல்லாவிதமான மனோ வியாதிகளினாலும் பாதிக்கப்படுகின்றனர்.

அதிலும் குறிப்பாக, எம்மவர் குறைவாக வாழுகின்ற இடங்களில் அகப்பட்ட மனிதர்களின் நிலை மிகவும் வருந்தத் தக்கது. வெளிநாடு சென்ற பின்னர், எமது நாடு போன்று அடுத்தடுத்த வீடுகளில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக வாழ முடியாது, ஒவ்வொருவரது வீடும் பத்து அல்லது இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், அதை விட முக்கியமாக யாருக்கும் யாரையும் சந்திப்பதற்கு நேரம் இருக்காது. மாதம் முழுவதும் சம்பாதிக்கின்ற பணம் முழுவதையும் வாடகைக்கும், கார் இன்சூரன்ஸ் இற்கும், ஏனைய செலவுகளுக்கும் இறைத்து விட்டு வெறும் கையோடு வீட்டுக்கு வரமுடியாது. மேலதிக நேரம் வேலை செய்து சம்பாதித்தாக வேண்டும். எல்லாமே சேர்ந்து அவனை ஒர் இயந்திரமாகவே மாற்றி விடுகின்றது. இதில் தனிமையில் வாழ்பவன் நிலை மிகவும் கவலை மிக்கது. தின்றானா, குடித்தானா என்று கேட்கவே யாருமற்ற ஓர் அநாதையின் வாழ்க்கை. மன அழுத்தம் இன்னும் அமிழ்த்தி விடுகின்றது.
அப்படியான நேரத்தில் தான் மனதின் ஆழத்தில் அடங்கிக் கிடக்கின்ற வெறுப்பெல்லாம் மேலெழுந்து யார் மீதாவது கொட்டித் தீர்க்க வைக்கிறது. மனைவி குழந்தைகள் இருந்தால் அவர்கள் மீது பாயலாம். அதுதான் பல இடங்களிலும் நடந்தது. அவர்கள் இல்லையானால் வேறு யார் மீதும் பாய்வதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.
இந்த இடத்தில் தான் நான் முக்கியமான ஒரு விடயத்தை சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். எம்மவர் மனங்களில் ஏனைய மதத்தினர், இனத்தினர், சமூகத்தினர் மீது காழ்ப்புணர்ச்சிகளையும் வெறுப்பையும் விதைப்பதற்கு எமது சமூகம் ஒரு காரணமாக இருந்திருக்கின்றதா என்கின்ற ஆராய்ச்சியில் நான் இறங்கி யிருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரை அதில் ஏதோ ஓர் உண்மை இருப்பது போலவே படுகின்றது.
எனது பத்து வயதில் நான் யூதர்களுக்கு எதிரான மனநிலையில் வளர்க்கப்பட்டேன். அன்றே கொடிபிடித்து ‘மோசே தயான் மகிழ்ச்சியடையாதே, எங்கள் நாசர் இறக்கவில்லை’ என்று வீதி தோறும் முழக்கமிட்டது நினைவில் நிற்கிறது. அன்றைய சூழலில் எனக்கு யூதர்கள் யார் என்றே தெரிந்திருக்க நியாயமில்லை. எமது பள்ளிவாசல்கள் தோறும் குத்பாக்களிலும் பயான்களிலும் யூதர்களுக்கு எதிரான சொல்லாடல்கள் இன்றும் வந்து செல்கின்றன. எமது நம்பிக்கைகளுக்கும், சடங்குகள் மற்றும் ஷரியாக்கள் எல்லாவற்றுக்கும் மிகவும் அருகில் இருப்பவர்கள் அவர்கள்தான். அவர்களை நாம் என்றைக்கும் நட்புடன் அணுகியதில்லை. எமக்கும் அவர்களுக்கும் இடையிலான பிரச்சினை அரசியல் பிரச்சினை தானே ஒழிய, மார்க்கப் பிரச்சினையில்லை. அவர்கள் எமது நபியவர்களையும் ஈஸா நபியவர்களையும் ஏற்றுக் கொள்வதில்லை, அதில்தான் எமது வேறுபாடு இருக்கிறது, அது மிகச் சிறிய வேறுபாடு. அதை விட பலஸ்தீன் மண்ணை அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மண் என்று நம்பி அதற்காகப் போராடுகின்றார்கள். அதுதான் எமது பிளவை மோசமாக்கியது.

அவர்கள் ஓரிறைக் கொள்கையுடையவர்கள், சிலை வணக்கம் செய்யாதவர்கள், கோஷர் என்கின்ற ஹலால் முறையைப் பின்பற்றுபவர்கள், கத்னா செய்து கொள்பவர்கள். இன்னும் எவ்வளவோ ஒற்றுமைகள் இருக்கின்றன. அவற்றை நாம் பேசியது இல்லை. ரப்பாய் டோவியா சிங்கர் உடைய யு டியூப் நிகழ்ச்சிகளைப் பார்த்ததில்லை.
கிறிஸ்தவர்கள் பற்றிய, நம்பிக்கையை வளர்க்கும் வண்ணமான எந்த மார்க்க உபந்நியாசங்களும் நாங்கள் கேட்டதில்லை. அவர்கள் எமக்கு எதிரானவர்கள் என்கின்ற மனப்பான்மையையே வளர்த்து இருக்கின்றோம். ‘அவர்களிலும் ஸாலிஹானவர்கள் இருக்கின்றார்கள்’ என்கின்ற குர்ஆன் வசனத்தை நாம் மிகவும் இலகுவாகக் கடந்து போய் விடுகின்றோம். திரித்துவத்தை நிராகரிக்கின்ற எத்தனையோ கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள், எமது நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொள்பவர்களும் இருக்கின்றார்கள். இன்றைய சமூக சூழ்நிலை அவர்களை உண்மையின் பால் திரும்புவதில் இருந்து தடுத்துக் கொண்டிருக்கிறது.
அது போலவே எம்முடனேயே வாழ்கின்ற தமிழ் இந்துக்கள், சிங்களவர் குறித்தும் நாம் எந்தவிதமான நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவில்லை. ‘காபிரின் உறவு கரண்டி(காலு)க்குக் கீழே’ என்று சொல்லியே வளர்க்கப்பட்டோம், ஒரு காலத்தில் எமது அயலூர் மக்கள் தண்ணீருக்காகக் கஷ்டப்பட்டு ஆறு குளம் என அலைந்த போது, அவர்களை கேலி செய்வது போல,
‘-----------------------ரே ,
சங்கை கெட்ட ஊராரே,
வெயிலேறித் தண்ணி வார்க்க - உங்க
வேதம் என்ன சிங்களமோ?’
என்று பாடி வைத்தோம். நாம் யாரை மதித்தோம்?!
பின்னர் வந்த காலங்களில் இயக்கங்கள் தோன்றி ஏனைய இனத்தவர்களின் நம்பிக்கைகளை நடுவீதியில் கிழித்துத் தொங்க விட்டன. அவைகள் ஏனைய நம்பிக்கை கொண்டோரை மட்டுமல்ல, சொந்த சமூகத்திலேயே அவர்களின் கொள்கைகளுக்கு உடன்படாதவர்களை மிகக் கடுமையான சொற்களால் வசைபாடின, இன்றைக்கும் முகநூலைத் திறந்தால் அவர்களின் வசை மொழிகளும் திட்டுக்களும் பயமுறுத்தல்களும் மிகவும் தாராளமாகவே உலா வருகின்றன.
ஒரு காலம் இருந்தது, எமது மார்க்க அறிஞர்கள் இலங்கை நாட்டுக்கு விஜயம் செய்கின்ற பொழுது, அந்நிய சமூகத்தவராக இருந்தும் எம் நாட்டு அரசியல் தலைவர்கள் அவர்களை விமான நிலையம் வரை சென்று வரவேற்று அழைத்து வந்து கௌரவிப்பார்கள். ஏனென்றால் எமது நாடு ஆதம் அலை அவர்களை சுமந்தது என்று நம்புகின்ற மார்க்க அறிஞர்கள் இங்கு வருவதை மிகவும் விரும்பினார்கள். ஆனால் இன்று அந்த நிலை இல்லை.
கொள்கைகளும் இஸங்களும் மாறுகின்ற பொழுது மக்களை நேர்வழியில் வைத்திருப்பதற்கும், சீர்படுத்துவதற்கும் அழகான சொற்களாலும், அன்பான வழிமுறைகளாலும் தான் முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து பயமுறுத்தல்களும் கபுர் வணங்கிகள், கபுர் முட்டிகள், கத்தச் சோற்றுக்கு அலைபவர்கள் என்றெல்லாம் பெயர் வைத்து வசை பாடி கொள்கைகளைத் திணிப்பதற்கு இவர்களுக்கு யார் உரிமையளித்தது என்று தெரியவில்லை. இப்னு தைமியாவின் கொள்கைகளை அமுல் படுத்த இப்னு அப்துல் வஹாபுக்கு ஒரு மன்னன் சவுத் உதவியளித்தான். அவன் மூலம் பல்லாயிரம் உலமாக்கள் கொல்லப்பட்டுத்தான் வஹாபிஸம் கட்டமைக்கப்பட்டது என்பது வரலாறு.

அன்றில் இருந்து இன்று வரை உலகில் வாழ்கின்ற உம்மத்துக்களுக்கு எது நடந்தாலும் தட்டிக் கேட்காத கொள்கையுள்ள ஒரு நாட்டை நாம் அடைந்தோம். எவ்வளவோ செல்வங்களையும் செல்வாக்கையும் அல்லாஹ் வழங்கியிருந்தும் அவற்றை உலகில் வாழ்கின்ற உம்மத்துக்களின் நல்வாழ்வுக்கென செலவிடாமல் ஆயுதம் வாங்கிக் குவித்து அண்டைய நாடுகள் மீது நடை பெறுகின்ற அத்துமீறல்களை என்ன என்று பாராமல், தாங்கள் மட்டும் வாழ்ந்து கொண்டு, தங்கள் கொள்கைகளை ஏனைய மக்கள் மீது திணிப்பதற்கு செல்வங்களை செலவிடுகின்ற ஒரு தலைமைத்துவம் எமக்கு வாய்த்திருப்பது ஒரு சோதனையே.
யார் யார் இணை வைக்கின்றார்கள் என்பதனை கண்காணிப்பது அவர்களின் வேலையல்ல. மனங்களை அறிந்தவன் அல்லாஹ். ஒவ்வொரு மனிதனின் வணக்கங்களை அறிந்தவனும் அவனே. உள்ளங்களின் நிய்யத்துக்களே முக்கியமானவை, அந்த நிய்யத்துக்கும் அதன் உண்மைத் தன்மைக்கும் மட்டுமே கூலிகள்.
ஏனைய இனங்களின் மீதும் சமூகங்கள் மீதும் மட்டுமல்லாது, தனது சொந்த சமூகத்தில் இருக்கின்ற மாறுபட்ட கொள்கை கொண்டவர் மீதும் வன்முறையைக் கட்டவிழ்க்கின்ற ஓர் ஆபத்தான நிலைமைக்கு நாம் ஆளாகி நிற்கின்றோம். ஷியாக்களும் சுன்னி முஸ்லிம்களும் நம்பிக்கையில் வேறுபட்டவர்களல்ல, அரசியலில் வேறுபட்டவர்கள். அது போன்று வஹாபிஸம், தௌஹீத், ஜமாஅதே இஸ்லாமி, தப்லீக் எதுவுமே நம்பிக்கையில் வேறுபட்டவர்கள் அல்ல. கிரியைகளில் கூட அடிப்படையில் வேறுபட்டவர்கள் அல்ல. ஒரு சில செயற்பாடுகள் மட்டும் வேறுபட்டு நிற்கின்றன என்பதற்காக அவர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.
உலகில் யாரும் வெறுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. எமது கண்மணி நாயகம் ஸல் அவர்கள் வேற்று மதத்தினரை வரவேற்று நாட்கணக்கில் தனது மஸ்ஜிதுன் நபவியில் தங்கச் செய்து அவர்களுடன் நல்ல விதமாக உரையாடி மார்க்கத்தை எடுத்துரைத்திருக்கின்றார்கள். அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி, அவர்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடி எமது நிலைப்பாட்டை எடுத்துரைப்பதை விடுத்து, அவர்களின் நம்பிக்கைகளுக்காக அவர்களை வெறுக்கும் வண்ணம் வழிகாட்டுகின்ற மார்க்கப் பிரச்சாரங்களையும் வெறுப்புரைகளையும் கைவிட்டு எல்லோரையும் நேசிக்கின்ற ஒரு சமூகத்தைக் கட்டமைக்கப் பாடுபடும்படி நான் உலமாக்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
டாக்டர் எஸ். நஜிமுதீன்.