நாட்டின் 10 வது நாடாளுமன்றத்துக்கான பொது தேர்தல் வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை (14) காலை 7 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது.
225 ஆசனங்களுக்காக மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படும் 196 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 8,352 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.
இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிட்ட நிலையில் இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படட்ட 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெற்றன.
வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
முதலில் தபால் மூல வாக்கு முடிவுகள் இன்றிரவு 10 மணிக்கு வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.