13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் : சஜித் மீண்டும் உறுதிஅரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் பல்வேறு இன மற்றும் மத சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரேமதாச, மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் திருத்தம் நாட்டின் சட்ட கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாடு
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நான் முன்னரே பேசியுள்ளேன். அதையும் இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன்.
குறிப்பாக நாட்டின் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 13வது திருத்தம் சட்டப் புத்தகத்தில் இல்லையா? எனவே சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை நடைமுறைப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு தீங்கானது அல்ல. அது உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. மற்றவர்கள் இதைக் கூற பயப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நான் அப்படி இல்லை. நான் சரியானதை அப்படியே சொல்கிறேன் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.