ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் பிரசாரங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் சிறுவர்களை ஈடுபடுத்துவது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (National Child Protection Authority) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெரியவர்களின் உதவி, தலையீடு அல்லது வற்புறுத்தலுடன் இந்தத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
பிரசார நடவடிக்கை
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள் பங்கேற்பதால் விபத்துக்கள் அல்லது உடல் மற்றும் மன உளைச்சல்களுக்கு உள்ளாக நேரிடும் என அதிகார சபை எச்சரித்துள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தமது அதிகார சபைக்குள்ளதெனவும் இதனால் அந்த பொறுப்புகளை தாமதமின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சாசனத்தில் கையொப்பமிட்டு அதில் அங்கம் வகிப்பதுடன் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளதாக அந்த சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
எனவே, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை அனைவரின் பொறுப்பாகக் கருதி தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்கள் பங்கேற்பதைத் தடுக்குமாறு பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.