Todaynewstamil

BREAKING NEWS

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை குழு தீர்மானத்தின் அடுத்த கட்ட நகர்வு

0 6

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 19ஆம் திகதி ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

ஜெனிவாவில் கடந்த திங்கட்கிழமை (09.09.2024) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.

காலநீடிப்பு

‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றியிருந்ததோடு உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் இயங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தன.குறித்த அறிக்கைகளில் இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கக் கூடிய வகையில் அந்தத் தீர்மானத்தைப் புதுப்பிக்குமாறு பேரவையிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இலங்கை தொடர்பில் 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் பின்னர், பின்னர் 51/1 ஆக காலநீடிப்புச் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், அந்தத் தீர்மானம் இம்மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.

பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள்

எனினும், இலங்கையில் இது தேர்தல் ஆண்டு என்பதால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வதற்கான சாத்தியப்பாடு குறித்து பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஆராய்ந்து வருகின்றன.

இந்நிலையிலேயே, 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வது குறித்து ஆராயப்படவுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதியுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் முடிவடையவுள்ளதுடன், இலங்கையைச் சேர்ந்த முன்னணி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஒக்டோபர் முதலாம் வாரத்தில் ஜெனிவா செல்லவுள்ளனர்.

இதன்போது, தேவையேற்படும் பட்சத்தில் இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்புச் செய்வதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரி உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.