புவிசார் அரசியல் பந்தயத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் என்பது இந்தியாவிற்கு முக்கிய நகர்த்தல் புள்ளியாகும்.
வெளியுறவுக் கொள்கையை வகுக்கும் போது, இந்தியாவானது அதன் தேசிய பாதுகாப்பு மற்றும் கவலைகளை கருத்தில் கொண்டே செயற்படும்.
அவ்வாறே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்யும் போட்டியில் சில நேரடி தலையீடுகள் மூலமும், மறைமுக உள்நுழைவுகள் மூலம் இந்தியா தனது பங்கை வகித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவானது இலங்கை பிராந்தியத்தில் ஆதிக்க அரசியலில் ஈடுபட்டிருந்ததான கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
அந்த நேரத்தில் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததால் நிலைமை மோசமடைந்ததை வரலாறுகள் காண்பிக்கின்றன.
அவ்வாறு ஒரு மாற்றத்தை விரும்பாத இந்தியா தற்போது 21 ஆம் திகதி இலங்கை மக்களால் தெரிவு செய்யப்படும் தலைவருடன் சேர்ந்து பயணிக்கும் ஒரு வலுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.
இலங்கையுடன் ஒப்பிடும்போது இந்தியா ஒரு பெரிய சக்தி. பொருளாதார ஒத்துழைப்பையும் தாண்டி அவர்கள் இலங்கையின் மீது நாட்டம் கொள்வது புவிசார் ராஜதந்திரத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று.
மேலும் ஐ.நா பாதுகாப்பு அமைப்பில் இந்தியா நிரந்தர இடம் பெறுவதற்கு அண்டை நாடுகளுடனான ஒத்துழைப்பென்பது அவர்களுக்கு மிக முக்கிய ஆதரவு பொருளாகும்.
இதனை மையப்படுத்தியே இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான நகர்வில் இந்திய முக்கிய நகர்த்தலை மேற்கொள்கிறது.
நிலையான மற்றும் முற்போக்கான இலங்கையை இந்தியா தற்போது எதிர்பார்க்கிறது.
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் என்பது மும்முனை போட்டியாளர்களையும் தாண்டி இந்தியாவிற்கும் ஒரு இறுதி பலப்பரீட்சையாக மாறியுள்ளது.