கனடாவின் கியூபெக்கில் கைதான பாகிஸ்தானிய இளைஞர் மாணவர் விசாவில் கனடாவுக்குள் நுழைந்துள்ளதாக அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
யூத மையம் மீது தாக்குதல்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யூத மையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட இந்த நபர் தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ளார். கியூபெக்கில் கைது செய்யப்பட்ட முகமது ஷாசீப் கான் மீது கடந்த வாரம் வழக்கு பதியப்பட்டது.
குறித்த நபருக்கு 2023 மே மாதம் மாணவர் விசா வழங்கப்பட்டதாகவும் ஜூன் மாதம் 24ம் திகதி அவர் கனடாவில் நுழைந்ததாகவும் அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
ஷாசீப் கான் தொடர்பில் வெளியிடும் கருத்து இது மட்டுமே என குறிப்பிட்டுள்ள அமைச்சர், அந்த நபர் குறித்து மேலதிக தகவலை வெளியிடுவது ஆபத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஷாசீப் கான் கடந்த புதன்கிழமை கியூபெக்கில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையவும், எதிர்வரும் அக்டோபர் 7ம் திகதி யூத மக்கள் மீது தாக்குதல் முன்னெடுப்பதும் அவரது திட்டமாக இருந்துள்ளது.
பயங்கரவாத குற்றச்சாட்டு
ஆனால், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே ஷாசீப் கான் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் ரகசியமாக விசாரணை முன்னெடுத்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, பயங்கரவாத குற்றச்சாட்டு விசாரணையை எதிர்கொள்ள நியூயார்க் நகரில் அவரை ஒப்படைக்கவும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
வெறும் 20 வயதேயான ஐ.எஸ் ஆதரவாளர் ஷாசீப் கான் கைது தொடர்பில் கனடாவில் பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்படுகிறது. இதனிடையே பாதுகாப்பு மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொண்டதாக அமைச்சர் மில்லர் தெரிவித்துள்ளார்.