கடந்த பொதுத் தேர்தலில் 3வீத வாக்குகளைப்பெற்ற அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை விட முன்னிலையில் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இடம்பெற இருக்கும் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை சஜித் பிரேமதாசவால் முந்திச் செல்ல முடியாது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளதாக சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
ரணில் விக்ரமசிங்க இந்த தேர்தலில் கீழ் மட்டத்தில் இருந்தே தற்போது முன்னிலைக்கு வந்துள்ளார். ஆனால் சஜித் பிரேமதாச கடந்த பொதுத் தேர்தலில் 27இலட்சம் வாக்குளை பெற்று எதிர்கட்சி தலைவராக இருந்து வருகிறார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்பது மாற்று அரசாங்கமாகும். அதனால் இந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு சவாலாக இருக்கவேண்டியது எதிர்க்கட்சியாகும்.
சஜித்திற்கு பின்னடைவு
என்றாலும் கடந்த பொதுத் தேர்தலில் 3வீத வாக்குகளைப்பெற்ற அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை விட முன்னிலையில் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறானால் அதற்கு எதிர்க்கட்சியின் பலவீனமே காரணமாகும். இதனையே ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். ரணில் விக்ரமசிங்க தமிழ் முஸ்லிம் மக்களுக்கு செய்த சேவைகள் அந்த மக்களுக்கு தெரியும். அதனால் இந்த தேர்தலில் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எந்த பக்கம் இருந்தாலும் அந்த மக்கள் ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கின்றனர்.
அவர்கள் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாருக்கு வாக்களிக்க தீர்மானித்தாலும் அது அவர்களே அவர்களை நெருக்கடிக்குள் தள்ளிக்கொள்ளும் நிலையாகும்.
எனவே அவர்கள் அவ்வாறான தீர்மானத்துக்கு செல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.