சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை மீறி சந்தையில் பணம் வாங்கினால் டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயர்வடையும் என ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
குருநாகலில் (Kurunegala) நேற்று (10) நடைபெற்ற அந்த மாவட்ட அறிஞர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடான கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி நாம் செயற்பட்டால், கடன் பெறுவதற்கான தேவைகள் குறைவாகவே இருக்கும்.
வரவு செலவுத் திட்டம்
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின்படி எதிர்காலத்தில் இந்நாட்டின் செலவு 6,800 பில்லியன் ரூபாவாகவும், வருமானம் 5,100 பில்லியன் ரூபாவாகவும் காணப்படுவதோடு, இடைவெளி 1700 பில்லியன் ரூபாவாகக் காணப்படும்.இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாகும். எனவே, இந்த இடைவெளியை நிரப்பும் இயலுமையும் எமக்கு உள்ளது.
ஆனால் ஜேவிபி தருவதாக கூறும் நிவாரணங்களை வழங்கினால் செலவு 8,900 கோடி ரூபாவாகவும், வருமானம் 4,900 பில்லியன் ரூபாவாகவும் காணப்படும். அதன்படி வரவு செலவுத் திட்ட இடைவெளி 4000 பில்லியன் ரூபாவாக அமையும்.
சர்வதேச நாணய நிதியம்
இந்த இடைவெளி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.9 சதவீதமாக காணப்படும். இவ்வாறான பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறி சந்தையில் பணம் வாங்கினால், வட்டி 25 சதவீதமாக இருக்கும். அதனால் டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயர்வடையும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளை மீறிவிட்டால் அவர்களின் ஆதரவு இரத்தாகும். அதனால் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி நகரும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.“ என தெரிவித்தார்.