முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக் (Mahinda Rajapaksa) கொலை செய்வதற்கு சதி திட்டங்கள் தீட்டப்படுவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் (Namal Rajapaksa) உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வு பிரிவும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மாத்தளையில் நேற்று (9.10.2024) இடம்பெற்ற நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே திஸ்ஸ குட்டியாராச்சி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,“ தேசிய மக்கள் சக்தியினால் இந்த கொலைக்கான சதி முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அவரது பாதுகாப்பு என்பனவற்றை இல்லாமல் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்க ஜேவிபி தாயாராகி வருகின்றது.
இந்த சதித் திட்டத்தின் உண்மை நிலையை அம்பலப்படுத்துமாறு நான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கிறேன்.ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வு பிரிவும் அறிவுறுத்தியுள்ளது.
ஆகவே அவர்களது பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்புக்கு வலியுறுத்தியுள்ளோம் இவ்வாறு திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ச்சியான புலனாய்வு அறிக்கைகளை அமைச்சு தீவிரமாக தேடி வருகிறது.
இந்த உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.