பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ – தொடங்கொட பகுதிக்காக, சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கோர்ப்பரேசனுக்கு (CHEC) 7.91 பில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த நிறுவனம் நிலையான ஒப்பந்த நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற போதிலும், முதலில் பிணக்கு தீர்ப்பாயத்தின் முடிவுக்கு அமைய இந்த தொகை செலுத்தப்படவுள்ளது.
நிறுவனத்துக்கான கொடுப்பனவு
இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதாவது ஆகஸ்ட் 27 அன்று அமைச்சரவையால் இந்த கொடுப்பனவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமையன்றே தீர்வுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த பாதையமைப்புக்கு சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி மூலம் நிதியளிக்கப்பட்டது மற்றும் 2011 இல் திறக்கப்பட்டது.
எனினும் அந்த ஆண்டு ஜப்பான் மற்றும் சீன நிறுவனங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டது சீன நிறுவனத்திடம் ஆலோசகர் சான்றிதழ் இல்லை என்பதே இந்த பிரச்சினைக்கான காரணமாக இருந்தது.
இந்நிலையில், தமது பணிக்கான ஊதியத்தை சீன நிறுவனம் கோரி வந்தது. இதனையடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பொறிமுறை ஒன்று அமைக்கப்பட்டு, அது ஜனாதிபதியிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.
இதன் அடிப்படையிலேயே சீன நிறுவனத்துக்கான கொடுப்பனவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.