மாணவர் விசாவில் கனடா செல்பவர்களில், தற்காலிக மாணவர் நிலையிலிருந்து நிரந்தர வதிவிட உரிமைக்கு மாற விரும்பும் பட்டதாரிகளுக்கு 5 வழிமுறைகளை கனேடிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கனேடிய கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற பிறகு, சர்வதேச மாணவர்கள் நிரந்தர வதிவிடத்தினை பெறுவதற்கு பட்டப்படிப்பை முடித்தபின்னர் வேலை அனுமதியினைப் பெற்ற பின்னர், எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தினைப் பெறுவது, மாகாண நியமனத் திட்டம், அட்லாண்டிக் குடியேற்றத் திட்டம், கிராமப்புற மற்றும் வடக்கு குடியேற்றத் திட்டத்தை பெறுவது, விவசாயம் மற்றும் விவசாய உணவுத் திட்டத்தின் மூலம் குடியேற்றத்தை பெறுவது போன்ற 5 வழிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
மாணவர் விசாவில் கனடா வரும் சர்வதேச மாணவர்கள், தகுதியான ஒரு பட்டப் படிப்புத் திட்டத்தில் பட்டம் பெறுவதற்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால், அவர்கள் படிப்பை முடித்த பிறகு திறந்த பணி அனுமதிக்கு மாற்றப்படுவார்கள்.
இந்த பணி அனுமதி பெறுவதன் மூலம் நிரந்தர வதிவிட அனுமதியை பெற வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்து கனேடிய பணி அனுபவத்தைப் பெறுவதன் மூலம் எக்ஸ்பிரஸ் நுழைவு அமைப்பு அல்லது பிற மாகாண திட்டங்கள் மூலம் நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
வெளிநாட்டு பட்டதாரிகள் உட்பட தகுதிவாய்ந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான பொதுவான பாதையாகவும் இந்த எக்ஸ்பிரஸ் நுழைவு முறை காணப்படுவதாக கூறப்படுகிறது.
அடுத்து மாகாண தேவைகள் வாயிலாகவும், சர்வதேச பட்டதாரிகள் மற்றும் தகுதிவாய்ந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது.
சில மாகாணங்களில் எக்ஸ்பிரஸ் நுழைவுடன் தொடர்புடைய பட்டதாரிகளுக்கு மாகாண தேவைகள் வாயிலாக நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாகாணமும் பிரதேசமும் அதன் சொந்த நியமனத் திட்டங்களைக் கொண்டுள்ளன, அவை சர்வதேச பட்டதாரிகளுக்கான குறிப்பிட்ட பிரிவுகள் உட்பட பல துறைகளைக் கொண்டுள்ளன. இந்த மாகாண தேவைகள் வாயிலாக 2025 ஆம் ஆண்டிற்குள் 110,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க கனடா தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
அட்லாண்டிக் குடியேற்றத் திட்டம் என்பது கனடாவின் அட்லாண்டிக் மாகாணங்களில் உள்ள நிறுவனங்களுக்குத் தகுதியான வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் சமீபத்திய பட்டதாரிகளையும் பணியமர்த்துவதன் மூலம் அவர்களுக்கு வதிவிட உரிமையை வழங்குவதாகும்.
இந்தத் திட்டத்தின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்த ஒதுக்கீடு 6,500 ஆகவும் 2025 க்கு 8,500 ஆகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே தங்கள் படிப்பை முடித்த பிறகு, சர்வதேச பட்டதாரிகள் இவ்வாறான சிறப்பு நடைமுறைகள் மூலம் நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.