உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், உக்ரைன் மீது சட்டவிரோத போரை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா முன்னெடுத்து வந்துள்ளது.
ஆனால் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் அதிரடியாக நுழைந்து பல கிராமங்களைக் கைப்பற்றி முன்னேறி வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார் என ஜனாதிபதி புடின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
துருக்கியில் முன்னெடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்த அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க ரஷ்யா தயாராக இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள புடின்,
இதுவரை அப்படியான ஒரு வாய்ப்பை நாங்கள் நிராகரித்ததில்லை என்றும், ஆனால் சில இடைக்கால கோரிக்கைகளின் அடிப்படையில் அல்ல, மாறாக இஸ்தான்புல்லில் ஒப்புக் கொள்ளப்பட்ட மற்றும் உண்மையில் தொடங்கப்பட்ட அந்த ஆவணங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
துருக்கியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பூர்வாங்க ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது, ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அத்துடன் அந்த ஒப்பந்தம் தொடர்பான எந்த தரவுகளும் வெளியிடப்படவில்லை.
புதிதாக முன்னெடுக்கப்படும் அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட வேண்டும் என்றும் புடின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் நிர்வாகத்திற்கு இதில் ஒப்புதல் இருக்கும் என்றால் ரஷ்யாவும் தயார் என புடின் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்டு 6ம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அதிரடியான தாக்குதலை உக்ரைன் படைகள் முன்னெடுத்தது.
தற்போது ரஷ்யாவின் 500 சதுர மைல்களுக்கு மேல் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன. மேலும், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ரஷ்யா எதிர்கொள்ளும் மிக மோசமான தோல்வி இதுவென்றும் கூறப்படுகிறது.