ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் செல்லும் முயற்சியில் புலம்பெயர்வோர் பலர் உயிரிழப்பதைக் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
தொடர்ந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோர்
ஆனால், தொடர்ந்து உயிரிழப்புகள் குறித்த செய்திகள் வெளியாகிவரும் நிலையிலும், புலம்பெயர்வோர் தொடர்ந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் காட்சிகளைக் காணமுடிவதாக Associated Press ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செவ்வாயன்று, பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி 12 புலம்பெயர்வோர் உயிரிழந்தார்கள்.
அவர்களில் ஆறு சிறுவர்களும், ஒரு கர்ப்பிணிப்பெண்ணும் அடங்குவர்!
இருந்தும், அடுத்த நாளே, அதாவது, புதன்கிழமையன்றே, மீண்டும் ஒரு சிறுபடகில் ஒரு கூட்டம் புலம்பெயர்வோர் வடக்கு பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியா நோக்கி புறப்பட்டுள்ளார்கள்.
எப்படியாகிலும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடவேண்டும் என்பதே அவர்களுடைய ஒரே குறிக்கோளாக காணப்படுகிறது.
இதற்கிடையில், செவ்வாயன்று நிகழ்ந்த துயர உயிரிழப்புகளைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin, பிரித்தானியாவின் அதிக கட்டுப்பாடுகள் இல்லாத தொழிலாளர் சந்தை புலம்பெயர்வோரை பிரித்தானியாவை நோக்கி கவர்ந்திழுப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
ஒரு சிறிய நீர்ப்பரப்பைக் கடந்துவிட்டால் அல்லது பாதிவழி சென்றுவிட்டால் கூட பிரித்தானியாவில் வேலை கிடைத்துவிடும், அதுவும், முறையான ஆவணங்கள் இல்லாவிட்டால் கூட பிரித்தானியாவில் வேலை கிடைத்துவிடும் என்ற எண்ணம் புலம்பெயர்வோருக்கு உள்ளது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.