இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சியினை பெற்ற மொட்டுக்கட்சி இன்று சுக்குநூறாகிப்போயுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா குருமன்காட்டில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“இனவாதம் சாதிவாதத்திற்கு தேசியமக்கள் சக்தியில் இடமில்லை. இப்போதே இந்த நாட்டை கட்டி எழுப்ப ஆரம்பிக்க வேண்டும். விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். உங்கள் ஆபரணங்கள் எங்கே. அவை வங்கிகளில் இருக்கிறது.
எனவே இந்த விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் விதை ஆராட்ச்சி நிலையங்களை புதுப்பிக்கவேண்டும்.
போதைப்பொருள் பின்புலத்தில் இருப்பது அரசியல்வாதிகளே, அது உங்கள் குழந்தைகளை பாதிக்கும். கிராமத்தை பாதிக்கும் அதனை முழுமையாக நாம் தடுத்து நிறுத்துவோம்.
எங்களுக்கு எவ்வாறான ஒரு அரசாங்கம் தேவை. தெற்கின் சிங்கள மக்களின் பெரும்பான்மை பெற்ற அரசாங்கமோ அல்லது வடக்கு மக்களின் பங்களிப்பு இல்லாத அரசாங்கமோ தேவையில்லை.
வடக்கு, கிழக்கு, தெற்கு மக்களின் நம்பிக்கையினை வென்ற ஒரு அரசாங்கமே எங்களுக்குத் தேவை. இதற்கு முந்தைய ஜனாதிபதிகள் உருவானது தெற்கில் இருந்து மட்டுமே.
இம்முறை வடக்கு கிழக்கு தெற்கு மக்கள் இணைந்து தேசியமக்கள் சக்தியை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
ரணில் கடைசி நேரத்தில் என்ன செய்வாரோ என்று கூறுகின்றனர். ஒன்றுமில்லை. அவர் தோல்வியடைவார். சத்தமில்லாமல் வீடு செல்வார். அது அவருக்கு பழக்கப்பட்ட ஒன்று.
இந்தக் கள்வர்களை, நாட்டையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்தவர்களை, போதைப்பொருள் வியாபாரிகளை, உலகத்திடம் எங்களை அவமானப்படுத்தியவர்களை, போரை உருவாக்கியவர்களை, மூவின மக்களிடையில் சண்டைகளை உருவாக்கியவர்கள் என அனைவரையும் ஒன்றாக தோற்கடித்து நாட்டை பசுமையாக்கி மக்களின் வாழ்க்கையினை அழகாக்கும் ஒரு புதிய அரசை கொண்டு வருவதற்காக நாம் பாடுபடுவோம்.” என்றார்.